4.12.12

இந்து மத ஆட்சியா?


தமிழ்நாட்டில் இந்து மத ஆட்சியா நடக்கிறது? டிசம்பர் 24ஆம் தேதி வைகுந்த ஏகாதசியாம். வைஷ் ணவர்களால் பெரிதும் கொண்டாடப்படும் விழா இது.
ஸ்மார்த்தர்கள் சிவராத்திரி கொண்டாட வில்லையா? இவர்களுக்குள் இது போட்டிக் கடை அது எப்படியோ தொலைந்து போகட்டும்.
வைகுந்த ஏகாதசி சிவராத்திரி கொண்டாடும் பக்தர்கள் நேரிடையாக சொர்க்கத்துக்கே போகட்டும்!
(அந்த நாள்களில் விரதம்  இருந்து கொண்டாடு வோர் திரும்பி வர மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்திற்குப் போய் விடுவார்கள் என்பது உண்மையாகுமானால் ஒரே ஒரு பக்தராவது கோயில் பக்கம் செல்லுவாரா? என்பது வேறு விடயம்)
இப்பொழுது என்ன பிரச்சினை?  சிறீரங்கத்தில் நடக்கவிருக்கும் அந்தக் கோயில் விசேடத்துக்காக  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூடிப் பேசி இருக்கிறார்கள். பக்தர்கள் அதிகம் வரக் கூடும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை, வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்து விவாதித்துள்ளனர். அதெல்லாம் சரி தான், ஓர் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையும்கூட!
ஆனால் வெளியில் வந்திருக்கும் சேதி அதிர்ச்சி தரக் கூடியதாகும். அந்த நாளில் சிறீரங்கம் வருவோர்க்குப் பேருந்தில் கட்டணம் கிடையாதாம்.
அது எப்படி என்று தெரியவில்லை. எந்தச் சட்ட விதியின்கீழ் மாவட்ட ஆட்சியர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்பதை விளக்க வேண்டும்.
வைகுந்த ஏகாதசி மட்டும் நெய்யில் பொரித்ததா? மற்ற மற்ற மதக்காரர்களும் ஏன், இந்து மதத்திலேயே இன்னொரு பிரிவுக்காரர்களும் அந்த வாய்ப்பைக் கோர மாட்டார்களா?
பகுத்தறிவுவாதிகள் மதச் சார்பற்றவர்கள் எடுக்கும் விழாக்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சென்றால் மாவட்ட ஆட்சியரின் நிலைப்பாடு சிக்கலுக்கு ஆளாகாதா?
பக்தர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பது என்பது வேறு - இலவசமாகப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று கூறுவது வேறு.
அரசு என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் அவ்வாறுதான் கூறுகிறது.
மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதது என்பதாகும். எல்லா மதத்தையும் சமமாகப் பாவிப்பது என்பதெல்லாம் தவறான வியாக்கியானமே!
சிறீரங்கத்துக்கு மட்டும் அப்படி என்ன தனிச் சலுகை? முதல் அமைச்சர் தொகுதி என்பதாலா? இது உண்மையாக இருக்குமானால், அதுகூட பிற மதத்தவர்கள் மத்தியில் முதல் அமைச்சர் பற்றி கடும் அதிருப்தி ஏற்படத்தான் வழி வகுக்கும்.
முதல் அமைச்சரின் தொகுதி என்பதால் சட்டத்திற்கு உட்பட்டு கூடுதல் திட்டங்களைச் செயல்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக முதல் அமைச்சர் அந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்பதற்காக ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக அதிகாரிகள் செயல்படத் துடிப்பது ஆபத்தானதாகும். ஒரு கட்டத்தில் நெருக்கடி அதிகமானால் அரசே அதிகாரிகளைக் கைவிட்டு விடும்.
தமிழ்நாடு எங்கும் (சென்னையைத் தவிர்த்து) வெளி மாவட்டங்களில் 16 மணிக்கு மேல் மின் தடை! ஆனால் சிறீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா நடக்கும் காலத்தில் மூன்று நாட்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுமாம்.
இது என்ன கேலிக் கூத்து! அங்கு அடித்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீமான் ரெங்கநாதனுக்குச் சக்தியிருந்தால் அந்த மூன்று நாட்களுக்குமே சூரியன் மறையாமல் பார்த்துக் கொள்ள வைக்கலாமே - காற்றையும் வீசச் செய்து புழுக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாமே - கொசுக் கடியில்லாமலும் காப்பாற்றலாமே!
பாவம், அவர் என்ன செய்வார்? கோயில் தீப்பற்றி எரிந்து சிறீரங்கநாதனே எரிந்து வெடித்துச் சிதறவில்லையா? வேறு சிலைதானே வடித்து வைக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் கல்வி வளர்ந்த சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று சொல்லுவதற்கே வெட்கப்படத்தான் வேண்டியுள்ளது.
அய்.ஏ.எஸ்., படித்து மாவட்ட ஆட்சியர் ஆனால் என்ன? பகுத்தறிவு வேலை செய்யவில்லையே! அரசமைப்புச் சட்டத்தையும் மதிக்கவில்லையே! மாவட்ட ஆட்சியர் முடிவை மாற்றாவிட்டால் எதிர் காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் பெருகிக் கொண்டே போகும். மாவட்ட ஆட்சியர் திண்டாடத் தான் நேரும்.

ஜாதியின் பெயரால் அரசியல்


திராவிடர் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் (1.12.2012) கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லட்சியங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அறவேயில்லாதவர்கள் ஜாதியை முன்னெடுப்பதும், தலித், தலித் அல்லாதார் என்று உத்தி பிரித்துக் (ஞடிடயசளையவடி) கொச்சை அரசியல் நடத்தத் துடிப்பதும் அசல் வெட்கக் கேடாகும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூகநீதிப் போராளிகளின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு அறைகூவல் விடுவதாகும். தலித் - தலித் அல்லாதார் என்று பிரிப்போர் யாராக இருந்தாலும், அது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு உரியதாகும்.
இதற்குள் தீண்டாமை அனுசரிப்பது என்கிற கொடிய நஞ்சு இருப்பதால், இந்திய அரசமைப்புச் சட்டப்படி இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது போன்று மக்கள் மத்தியில் பிளவுகளை, கலவரங்களை தூண்டி விடுவோர் சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும் என்றும் இப் பொதுக்குழு தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறது.
தருமபுரி மாவட்டத்திலும், கடலூர் மாவட்டத்திலும் அண்மையில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகள் கொளுத் தப்பட்டதற்கு இப்பொதுக் குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இது ஒரு ஜாதிக் கலவரத் தீயாகப் பரவாமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்றும், ஒத்த கருத்துள் ளோர்களை ஒருங்கிணைத்துக் கூட்டுச் செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புது வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும் என்றும், இழப்பீடுகளைக் கணக்கெடுத்து அதற்கேற்றாற் போல இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
வரும் டிசம்பர் 9 ஆம் தேதியன்று தருமபுரியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
ஜாதி வெறியைத் தூண்டும் வகையில் பேசுவோர், எழுதுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
கோவில் கருவறைக்குள் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் அர்ச்சகர் ஆக முடியாது என்ற நிலை இன்றுவரை இருந்து வருகிறது.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டம் உச்சநீதிமன்றத்தில் முடக்கப் பட்டுள்ளது.
அ.இ.அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சியில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்திட திருச்சியையடுத்த கம்பரசம்பேட்டையில் இடமெல்லாம் தேர்வு செய்யப்பட்டதை (1996) இப்பொதுக்குழு நினைவு படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி செயல்படுத்தினால், இப்பொழுது ஏற்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் மனோ நிலை ஏற்படும் என்றும் இப்பொதுக்குழு தெளிவுபடுத்துகிறது!
இந்தத் தீர்மானம் தன்னிலை விளக்கம் கொண்டது. ஜாதி ஒழிந்த சமத்துவச் சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று கருதுகிற அனைத்துத் தரப்பினரின் உணர்வை வெளிப்படுத்தக் கூடியது.  திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மானம் மட்டுமல்ல; இன்று காலை திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு ஒத்தக் கருத்துள்ள பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் ஓர் இந்தத் இத்தீர்மானத்தில் பிரதிபலிப்புள்ளது.
தருமபுரியில் ஜாதிய வன்முறை ஏவி விடப்பட்ட குறுகிய காலத்தில் அதே பாணியில் கடலூரிலும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த டெங்கு வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்பட வேண்டுமானால், அரசு ரீதியாக மேற் கொள்ளப்படும் நிவாரண திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அந்தப் பணியைத் தான் முன்னிலும் வேகமாக எடுத்துக் கொள்ள திராவிடர் கழகம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பேசிய தலைவர்கள் எல்லாம் இந்தத் திசையில்தான் சங்கநாதம் செய்தனர்.
இந்தக் கருத்துக்களை எடுத்துச் சொன்ன பொழு தெல்லாம் பலத்த கைதட்டலும், ஆரவாரமும் மக்கள் கடலில் எழுந்தன என்றால், தந்தை பெரியார் ஊட்டிய உணர்வு இன்னும் குத்திட்டுத்தான் நிற்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
விழாவில் பங்கேற்ற கலைஞர் அவர்கள் சொன்னதுபோல திராவிடர் இயக்க இளைஞர்களிடத்தில் வளர்ந்துவரும் உணர்வுகளைப் பார்க்கும் போது இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் ஒரு புதிய நிலை மலரும்; ஜாதியை முன் வைத்து அரசியல் நடத்த முடியாது எனும் நிலை பிறக்கும் என்று மானமிகு கலைஞர் அவர்கள் நம்பிக்கை தெரி வித்துள்ளார்.
திராவிடர் கழகத்தை பொறுத்தவரை அதன் பயிற்சிப் பட்டறையை ஒரு முறையான திட்டமாக நடத்திக் கொண்டுதான் வருகிறது. தி.மு.க.வும் அந்தத் திட்டத்தை வேகமாக முன்னெடுத்துக் கொண்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் மட்டும் ஜாதி ஒழிப்புத் தீ பற்றிக் கொள்ளுமேயானால் அதனை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது.
எனவே நமது கருத்து மய்யமாக கொள்ள வேண்டியது மாணவர்கள், இளைஞர்கள் மூளைதான்.
கூட்டுச் செயல் திட்டத்துடன் புறப்பட்டுள்ள திராவிடர் இயக்கம் - பொதுவுடைமை இயக்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் வெற்றி பெற்றிட அனைத்துத் தரப்பினரும் ஆதரவுக் கரத்தை நீட்டுவார்களாக!
ஜாதியைச் சாய்ப்போம்! சமத்துவம் படைப்போம்!!

தருமபுரியை நோக்கி!


வரும் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிக முக்கியமான நாள். நாட்டு மக்கள் அனைவரின் பயணமும் தருமபுரியை நோக்கி இருக்கப் போகிறது - இருக்கவும் வேண்டும்!
ஆம் அன்று  ஜாதி - தீண்டாமையை எதிர்த்து கருத்துப் போர் தொடங்கப்பட உள்ளது. காலையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர்  ஒற்றுமை ஓங்க வேண்டிய அவசியம் - ஏன்? உரிமைகள் மறுக்கப்பட்ட இந்த இரு பிரிவினரும் இணைந்து ஆதிக்க சக்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் - ஏன்? எனும் பொருளில் கருத்தரங்கமும், மாலை மக்கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முழக்கங்கள் அடங்கிய பேரணியும், சமூக நீதிச் சிந்தனையும், மனிதநேய மாண்பும், பேதமற்ற சமூகத்தைப் படைக்க விரும்பும் போராளிகளும் போர்க்குரல் கொடுக்கும் பொது மாநாடும் - என்றென்றும் பேசப்படும் வகையில் எழுச்சியுடன் நடைபெற உள்ளன.
மனிதனை மனிதனாகப் பார்க்காமல் ஜாதி வெறிக் கண் கொண்டு பார்ப்பது பாசிச நோயின் சேட்டையாகும்.
தந்தை பெரியார் அவர்கள் ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்களின் பிடியிலிருந்து பிறப்பின் அடிப்படையில் சூத்திரர்களாக்கப்பட்ட பஞ்சமர்களாக்கப்பட்ட மக்களுக்காக பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைத் தொடங்கினார் நடத்தினார்!
அதற்காக அவர் கண்ட களங்கள் கணக் கற்றவை; - சிறைச் சாலைகள் எண்ணற்றவை; எதிர்ப்புகள், ஏளனங்கள், இருட்டடிப்புகள் இவற்றை எல்லாம் கடந்து தந்தை பெரியார் நம்மை எல்லாம் மனிதராக்கினார்.
நடக்கும் உரிமை, படிக்கும் உரிமை, உத்தியோகம் பெறும் உரிமைகள் என்று அங்குலம் அங்குலமாக தமிழர்களை மேலே உயர்த்தினார்.
தமிழன் என்னும் ஓரினக் கோட்பாட்டுக்கு பெருந்தடை ஜாதி என்பதை ஆழமாக உணர்ந்து ஜாதி ஒழிப்பை தன் முதல் கொள்கையாகக் கொண்டார்.
அதன் பலனை தமிழர்கள் அனுபவித்து வரும் இந்தக் கால கட்டத்தில், ஜாதியை முன்னிறுத்தி, தமிழர்கள் என்னும் ஓரினக் கோட்பாட்டை ஒழிக்க சிலர் முயலுகின்றனர் என்றால் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை. அதே நேரத்தில் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்பதிலும் அய்யமில்லை.
சமூக நீதித்தளத்தில், இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் உரிமைகள் மறுக்கப்பட்ட - வாய்ப்புகளின் கதவுகள் அடைக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்து கருத்துக்கள் பரிமாற்றம் செய்வது என்பது வேறு!
அதனைத் தலைகீழாகப் புரட்டிப் பிடித்து, தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்குத் துருப்பாகப் பயன்படுத்தும் தந்திரம் வேறு. இந்தக் கண்ணிவெடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. சிக்கிக் கொள்ளவும் மாட்டார்கள்.
ஜாதி என்னும் நச்சுக் காளான் எந்தக் காரணத்தை முன்னிட்டு வளர்க்கப்பட்டாலும் சரி, அது மறைமுகமாக பார்ப்பனீயத்தின் ஆதிக்கத்தை இன்னொருவகையில் மீண்டும் அரியாசனத்தில் அமர வைக்கும் ஆபத்தான முயற்சி என்பதை மறக்க வேண்டாம்!
அதனால்தான் பார்ப்பன ஊடகங்கள் இந்தப் பிரச்சினையில் கொம்பு சீவி விடுகின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்!
புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளலாம் என்று கூறும் சூழ்ச்சியை முறியடிப்போம், வாரீர்!
தமிழ்த் தேசியம் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு, பிறவியிலேயே ஆண்டாண்டுக் காலமாகத் தீண்டத்தகாத மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக ஆக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்று திரட்டும் முயற்சியாம்! இதுதான் தமிழர்களை ஒன்றுபடுத்தும் தமிழ்த் தேசியத்தின் இலட்சணமோ! தமிழர்களை ஒன்றிணைப்பது திராவிடர் இயக்கம்தான் என்பதைக் காட்டுவோம், வாரீர்  - தருமபுரிக்கு!